
அத்துடன், மக்கள் நலனுக்காக அன்றி இன்று நாட்டில் பணத்திற்காக அரசியலில் ஈடுபடும் அரசியல்வாதிகளே அதிகமாக இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் இருவர் மீண்டும் பதவியேற்றுக் கொண்டமை குறித்து விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “போதைப் பொருள் வியாபாரம் செய்பவர்களோ, ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களோ ஜே.வி.பி.யில் இல்லை. அவை ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன முன்னணியிற்கும் உரித்தானவை.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களில் அகப்படுபவர்களும் கைது செய்யப்படுபவர்களும் இந்தக் கட்சியின் ஆதரவாளர்களே. ஆனால், அவர்கள் எமக்கு சேறு பூசுவதற்கு முயற்சிக்கின்றனர்.
இவ்வாறான தலைவர்களை தெரிவுசெய்த மக்களும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தை கட்சிகளுக்கு பகிர்ந்தளிப்பது தவறாகும்.
ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன முன்னணி என்று வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் இவர்கள் அனைவரும் ஊழல் மோசடி செய்வதில் ஒரே அணியாகவே செயற்படுகின்றனர்.
இரகசிய ஒப்பந்தங்கள் மூலம் நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பதே இவர்கள் அனைவரினதும் நோக்கமாகும். இவை மாத்திரமன்றி, இனவாத அரசியலிலும் ஈடுபடுகின்றனர். சிலர் பணத்திற்காக அரசியல் செய்கின்றனர்.
அமைச்சு பதவிகள் கூட பணத்திற்காகவே பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இன்று தானாக பதவி விலகுவதும், மீண்டும் பதவி ஏற்றுக் கொள்வதும் பணத்திற்காக என்பதே உண்மையாகும். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்” என்று தெரிவித்தார்.
