பிரித்தானியாவுக்கு மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் விஜயத்தின் முதல்நாளான இன்று(திங்கட் கிழமை) பிரித்தானிய மகாராணியைச் சந்தித்துள்ளார்கள்.
இன்று காலை லண்டன் வந்தடைந்த அமெரிக்க ஜனாதிபதியும் அவரது மனைவியும் பக்கிங்ஹாம் அரண்மனையில் இடம்பெற்ற மதிய விருந்துபசாரம் மற்றும் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
மதிய விருந்துக்கு பின்னர் ட்ரம்ப் தம்பதியர் வெஸ்ட்மின்ஸ்டர் சதுக்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வர். அதைத் தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது பாரியார் கமீலா ஆகியோரால் அவர்களுக்கு தேநீர் விருந்து வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மகாராணியால் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்படவுள்ள அரச விருந்தில் ட்ரம்ப் தம்பதியர் கலந்துகொள்ளவுள்ளனர். இவ்விருந்தில் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேற் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயத்தின் இரண்டாவது நாளான நாளையதினம் பிரதமர் தெரேசா மே-யை அமெரிக்க ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் காலநிலை மாற்றம் மற்றும் சீன தொழில்நுட்ப நிறுவனம் Huawei பற்றி விவாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.





