
கடந்தவாரம் அவர், தென்னாபிரிக்க குடியரசின் அதிபராக நாடாளுமன்றத்தால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்ட நிலையில் இன்று அவர் பதவியேற்றுள்ளார்.
தென்னாபிரிக்காவின் நிர்வாக தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள லாப்டஸ் வெர்ஸ்பெல்ட் மைதானத்தில் அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் முன்னிலையில் முறைப்படி அதிபராக ரமபோசா பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநில தலைவர்கள் மற்றும் மாநில முன்னாள் தலைவர்கள், சர்வதேச தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தென்னாபிரிக்க நாட்டின் அதிபராக பதவி வகித்த சிரில் ரமபோச, அந்நாட்டின் வர்த்தக அமைப்பு தலைவர் மற்றும் தொழிலதிபராக இருந்து வருகிறார். அவர், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை நாட்டின் துணை அதிபராக இருந்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் (ஏ.என்.சி.) தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
இதன்பின்னர் அதிபருக்கான தேர்தலில் சிரில் ரமபோசாவின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், அவர் போட்டியின்றி மீண்டும் தென்னாபிரிக்க குடியரசின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதனை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தலைமை நீதிபதி மொகோயெங் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
