
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் செயற்குழு விரைவில் கூடி விவாதிக்கும் எனத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்றுள்ளதுடன் இரண்டாவது முறையாகவும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறத் தவறிவிட்டது.
அதிலும் 39 ஆண்டுகளாக அமேதி தொகுதியில் நேரு குடும்பத்தினர் வெற்றிபெற்ற நிலையில், இம்முறை தேர்தலில் ஸ்மிருதி இராணியிடம் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் தோல்வியடைந்தார்.
இந்த தோல்வி குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட செயற்குழுக்கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
ஆனால், மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் அவரை சமாதானம் செய்து அமரவைத்துள்ளனர். அத்துடன் ராகுலின் ராஜினாமாவையும் ஏற்க மறுத்ததுடன், அவரே தொடர்ந்தும் தலைவர் பதவியில் நீடிப்பார் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் இராஜினாமாவை திரும்பப்பெற அவர் தொடர்ந்து மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவருகிறது. இதனால் குறித்த விடயத்தில் தீர்மானமொன்றை எடுக்கும் நோக்கில் காங்கிரஸ் செயற்குழு விரைவில் கூடி முடிவெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என ராகுல் காந்தியிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து தொலைபேசி மூலம் ராகுல் காந்தியை தொடர்பு கொண்டு அவர் பேசியுள்ளார். இதன்போது, தேர்தலில் தோற்றாலும் மக்களின் மனங்களை நீங்கள் வென்றுள்ளீர்கள்” என அவர் கூறியுள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் ஆதரவு கட்சிகளின் தலைவர்கள் ராகுல் காந்தியின் இராஜினாமா தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
