
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை குறித்து தெரிவிக்கையில்,
“இந்திய அரசியலில் மத்திய அரசிலோ, மாநில அரசிலோ ஒரு தலைவரை வைத்தே வெற்றி கிடைக்கும். மத்தியில் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் ஆகியோருக்குப் பிறகு மோடி ஒரு சிறந்த தலைவர்.
இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவைத் தவிர்த்து முழுமையாக மோடி அலைதான். தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலைதான். ஒருமுறை அரசியலில் அலை என்று வந்துவிட்டால், அந்த அலைக்கு எதிராக யாரும் நீந்த முடியாது. அந்த அலையோடு போனவர்கள் தான் ஜெயித்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், நீட் தேர்வு போன்ற பிரச்சினைகளும் எதிர்க்கட்சிகள் செய்த சூறாவளி பிரசாரமும் பா.ஜ.க.வின் தோல்விக்கும் மோடியின் எதிர்ப்பலைக்கும் காரணமாக இருக்கின்றது.
இதனிடையே, தமிழகத்தில் பா.ஜ.க. தோல்வி அடைந்திருந்தாலும் முதலில் நிதின் கட்கரி காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கூறியது பாராட்டுக்குரியது.
அவ்வாறே, மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு சிறந்த திட்டங்களை கொண்டுவர வேண்டும். முக்கியமாக கோதாவரி – காவிரி – கிருஷ்ணா நதி இணைப்பு திட்டத்தை விரைவில் செயற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் மட்டும் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கிறார்.
இதில் கலந்துக்கொள்ள அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவ்வகையில் ரஜினி, கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
