
குறித்த தெரிவுக்குழுவினால் முன்வைக்கப்படும் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதங்களை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சியின் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜூன் 18, 19 திகதிகளில் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாத தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பின்னர் இந்த தெரிவுக் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கையை வழங்க கடந்த 22 ஆம் திகதி பிரதி சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.
இந்நிலையில் கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர, நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தமது கட்சியின் மத்திய குழு விரைவில் இறுதி முடிவை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் அனைத்து ஸ்ரீ.ல.சு.க உறுப்பினர்களும் மத்திய குழுவின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும், தங்கள் சுயவிருப்பப்படி நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக அல்லது வாக்களிக்காமலோ இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
அத்தோடு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் நிலைப்பாட்டின் மீது ஸ்ரீ.ல.சு.க.விற்கு கவலை இல்லை என கூறிய அவர் எவ்வாறாயினும் அவர்கள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பது தெளிவாக உள்ளது என்று அவர் கூறினார்
