இரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு விக்கிலீக்ஸ் இணைநிறுவனர் ஜூலியன் அசாஞ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் கடந்த மாதம் ஈக்குவடோர் தூதரகத்தில் கைதுசெய்யப்பட்ட அசாஞ்சுக்கு குறித்த குற்றத்துக்காக நேற்றையதினம் 50 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவது தொடர்பான வழக்கு வெஸ்ட்மின்ஸ்ரர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அசாஞ் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வழக்கு மே மாதம் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பலவிருதுகளை வென்றதும், பலமக்களை பாதுகாத்ததுமான பத்திரிகைத்துறைத் தொழிலை செய்ததற்காக நாடுகடத்தப்படுவதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என அசாஞ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தின் ராஜாங்க ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அசாஞ்சை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதா என்பது குறித்து பிரித்தானியா முடிவெடுக்கவுள்ளது.
அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டு அங்கு இக்குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அசாஞ்சுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.