
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் இரண்டாவது முறையாக பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், மோடி தனது பெயருடன் இருந்த ‘சௌகிதார்’ என்ற அடைமொழியை இன்று (வியாழக்கிழமை) நீக்கினார்.
இதுதொடர்பாக அவர் இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரு பதிவுகளில் “ஜாதியவாதம், மதவாதம், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி போன்ற தீமைகளுக்கு எதிராக இந்த நாட்டை பாதுகாக்கும் சக்திவாய்ந்த அடையாளமாக சௌகிதார் என்னும் சொல் உருவாகி விட்டது.
தற்போது சௌகிதார் என்னும் சொல்லின் உத்வேகத்தை அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்லும் நேரம் வந்து விட்டது. இந்த உத்வேகத்தை எல்லா வேளைகளிலும் உயிர்ப்புடன் வைத்திருந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டியுள்ளது.
எனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து சௌகிதார் என்னும் சொல் விடைபெற்று என்னுள் உறைந்திட்ட ஒரு பகுதியாகிறது. நீங்களும் அவ்வாறே செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தன்னை நாட்டின் முதல் சேவகன் என்று முன்னர் தெரிவித்திருந்தார். பின்னர், நாட்டின் காவலாளி என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட அவர், டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருடன் ‘சௌகிதார்’ என்ற அடைமொழியை இணைத்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. ஆட்சி செய்யும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், பா.ஜ.க. உறுப்பினர்கள் தங்களது பெயருக்கு முன்னால் ‘சௌகிதார்’ என்ற அடைமொழியை இணைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
