பிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஐபில் ரவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள ஐபில் ரவர் உலக புகழ்ப்பெற்றது. இந்த ரவரை வடிவமைத்த அலெக்சாண்டர் கஸ்டவ் ஐபில் லின் என்பவரின் பெயரை குறிக்கும் வகையில் இது ஐபில் ரவர் என பெயரிடப்பட்டது.
ஆண்டுதோறும் 55 இலட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் என அனைவரும் கண்டுகளித்து வருகின்றனர்.
இந்த ஐபில் ரவர், நேற்றைய ஒரு இளைஞரால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த ரவரில் இளைஞர் ஒருவர் யாருக்கும் தெரியாதபடி, அதன் உச்சியினை அடைய வேண்டும் என்ற முனைப்புடன் ஏறத் தொடங்கியுள்ளார்.
அவர் சிறிது தூரம் சென்ற பின்னர் அங்கிருந்த சில சுற்றுலாப்பயணிகள் அதனைக் கண்டுள்ளனர். உடனடியாக அங்கிருந்த பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து ஐபில் ரவருக்கு வந்த பாதுகாப்புப்படையினர், சுற்றுலாப்பயணிகளை தற்காலிகமாக வெளியேற்றினர். பின்னர் அந்த இளைஞரை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
குறித்த இளைஞர் 149 மீட்டர் அதாவது 488 அடி உயரத்திற்கு கிடுகிடுவென ஏறிவிட்டார். சுற்றுலாப் பயணிகளுக்கிடையே பெரும் பதற்றம் நிலவவே, ஐபில் ரவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்தனர்.
எனினும், பார்வையாளர்கள் திரும்பிச்செல்ல மனமில்லாமல், அதிகாரிகளிடம் திறக்குமாறு வலியுறுத்தினர். பாதுகாப்புக் கருதி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இந்தநிலையில் குறித்த இளைஞரை 6 மணி நேரம் போராடி பாதுகாப்பாக மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, தற்காலிகமாக மூடப்பட்ட ஐபில் ரவர் மீண்டும் இன்று உள்ளூர் நேரப்படி, 9.30 அளவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





