
இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தி நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் மதுரையில் தொடங்கப்பட்டது. மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கோயம்புத்தூர், ஸ்ரீபெரும்புதூர் உட்பட 11 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் 3ஆவது இடம் பிடித்தது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 3.72 சதவீதம் வாக்குகளையும் அக்கட்சி பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்குள் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்ய வட்டாரங்கள் கூறியதாவது, “மக்களவை தேர்தலின்போது, போதிய கட்டமைப்புகள் இல்லாததால் பிரசாரங்களுக்கு அனுமதிவாங்குவது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. இதுபோன்ற நிகழ்வு அடுத்து வரும் தேர்தல்களில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கமல்ஹாசன் கவனமுடன் இருக்கிறார். எனவே, உள்ளாட்சி தேர்தல் வருவதற்குள் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த சூழலில், சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், கட்சியின் கட்டமைப்பு, அடுத்த கட்ட அரசியல் நகர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது” என்று கூறியுள்ளனர்.
