இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளின் முதலாம் மாதத்தினை முன்னிட்டு நாசிவந்தீவு மக்களினால் பூசைகள் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த ஏப்ரல் 21ம் திகதி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சேயோன் தேவாலயம் உட்பட கொழும்பிலுள்ள தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகளில் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி விசேட பிரார்;த்தனைகள் இடம்பெற்றதுடன், மத தலைவர்கள் மற்றும் கலந்து கொண்ட பொதுமக்களால் ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான க.கமலநேசன், எஸ்.நல்லரெட்ணம், நாசிவந்தீவு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் எஸ்.விக்கினேஸ்வரன், மாதர் அபிவிருத்திச் சங்க தலைவி திருமதி.எஸ்.பரமேஸ்வரி, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது நாசிவந்தீவு பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.எஸ்.வெற்றிவேல் குருக்கள் மற்றும் மயிலங்கரச்சை விகாராதிபதி ஸ்ரீ மகிந்தாராம ஆகியோரினால் இரங்கல் உரை நிகழ்த்தப்பட்டது.





