
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளிடம் இருந்து ஆட்சியைப் பறித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் கோலோச்சிய நிலையில், பா.ஜ.க.வின் திடீர் வளர்ச்சி, எழுச்சி மம்தாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் மம்தா கட்சி கடந்த ஆண்டு பெற்ற தொகுதிகளில் பலவற்றை இழந்து 22 இடங்களை மட்டுமே பெற்றது. கடந்த தேர்தலில் 2 இடங்கள் பெற்ற பா.ஜ.க. 18 இடங்களையும் வென்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பா.ஜ.க. கைப்பற்றியுள்ள 18 தொகுதிகளில் மொத்தம் 129 சட்டப்பேரவை தொகுதிகள் வருகின்றன. அதாவது 129 தொகுதிகளில் வெல்லக்கூடிய அளவுக்கு பா.ஜ.க.வுக்கு வலிமை உள்ளது. இதனால் அடுத்த 2 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பா.ஜ.க.வின் இந்த வளர்ச்சி மம்தாவுக்கு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி‘‘திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 சட்டமன்ற உறுப்பினர்கள் என்னுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றவுடன், அவர்கள் கட்சியில் இருந்து விலகிவிடுவார்கள். அரசியல் களத்தில் மம்தா சறுக்கப்போகிறார்’’ என ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மேற்கு வங்க அரசுக்கு எதிராகப் பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் சிக்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, தற்போது கட்சி தாவல் முயற்சிகள் காரணமாக மம்தா கடும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
