மதரசா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.அவ்வகையில், மதரசா பாடசாலைகள் தேசிய கல்வி நிறுவனத்தின் ஒழுங்கு விதிமுறைகளுக்குள் கொண்டுவரப்பட்டு சகல இன மாணவர்களும் கல்வி கற்கும் வகையில் மாற்றியமைக்கத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மதரசா பாடசாலைகள் குறித்து கடந்த நாட்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த நான்கு வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் சமய பாடசாலைகள் அனைத்தும் சகல இன மக்களுக்கும் பொதுவாக ஆரம்பிக்கப்பட்டவையாகும். இந்த குறுகிய காலப்பகுதியில் சமயமொன்றுக்கு சார்பாக எந்த பாடசாலைகளயும் ஆரம்பிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
அதேபோன்று, எதிர்காலத்தில் எஞ்சியுள்ள பாடசாலைகளையும் சகல சமூகத்தினரும் கல்வி கற்கக்கூடிய பாடசாலைகளாக மாற்றியமைக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.





