இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கியதாக குற்றஞ்சுமத்தப்படுகின்ற அமைச்சர் மற்றும் ஆளுநர்களை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்தவகையில், ரிஷாத் பதியுதீன் அமைச்சுப் பதவியிலிருந்தும், எம்.எல்.ஏ.ம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் ஆளுநர் பதவியிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் ரஜவத்தே வப்ப தேரர் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்தார்.
குறித்த மகஜரில், “பயங்கரவாத தாக்குதல்களுடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் நேரடி தொடர்புகள் இருப்பதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அரச சொத்துக்களை பயன்படுத்தி பயங்கரவாதிகளுக்கு உதவி செய்துள்ளமை, தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பிற்கு நேரடியாக பங்களிப்பு வழங்கியுள்ளமை, தனது இல்லத்தில் குண்டுதாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளமை, பயங்கவாதத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு தமது அமைச்சில் பதவிகள் வழங்கியுள்ளமை, அரச தொழில் வாய்ப்புக்களை வழங்குவதாகக் கூறி முஸ்லிம் மத இளைஞர்களை தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பில் இணைத்தமை மற்றும் வெடிபொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு தனது அமைச்சினூடாக அனுமதி வழங்கியுள்ளமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மீதும் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அடிப்படைவாத கருத்துக்களை வெளியிடும் ஒருவராகவும் இவர் விளங்குகின்றார். எனவே இவர் ஆளுநர் பதவியிலிருந்து உடன் நீக்கப்பட வேண்டும். இடங்களை பகிர்ந்தளிப்பதில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநரான ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் மூலம் இளைஞர்களுக்கு அடிப்படைவாதத்தை போதித்துள்ளதோடு, அதற்காக பாரிய தொகை பணத்தையும் செலவிட்டுள்ளார். இவ்வாறு இளம் சந்ததியினர் மத்தியில் அடிப்படைவாதத்தை தூண்டியமையால் இவரும் ஆளநர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்” என்று குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





