
வைகாசி பொங்கல் விழாவிற்கு வருகைதரும் பக்தர்கள் நாட்டின் நிலைமை கருதி நடந்துகொள்ள வேண்டும் என அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் வைகாசி பொங்கல் விழா குறித்து இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது அவர் மேலும் குறிப்பிடுகையில், “வற்றாப்பளை அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவின் போது தூக்குக் காவடிகள் தூர இடங்களில் இருந்து வருவதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.
இதனைவிட விசேட அதிதிகள் வருகைதரும் போது வாகனங்கள் தரிப்பிடங்களை விடுத்து நிறுத்திவைக்கும் வழமையான செயற்பாடு தவிர்க்கப்படுகின்றது.
அத்துடன், வற்றாப்பளை அம்மன் கோயில் பகுதியிலிருந்து 2 கிலோமீற்றக்குள் காணப்படும் நந்திக்கடல் பகுதியில் வரும் 18ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதிவரை மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனோடு, 19ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதிவரையும் இறைச்சி கடைகள் மற்றும் மதுபான கடைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும். வற்றாப்பளை பொங்கல் தினத்திற்கு வருகைதரும் பக்தர்கள் நாட்டினதும், கோயிலுக்கு வரும் அனைவரினதும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
