ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய ஒன்பது தற்கொலை குண்டுதாரிகளின் அடையாளங்களை மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.கொழும்பு சின்னமன் கிரேன்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியவர் மொஹமட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட் எனவும், ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் மொஹமட் இப்ராஹிம் ஹில்ஆம் அஹமட் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இவர்கள் இருவரும் இப்ராஹிம் என்பவரின் மகன்மார்களாவர்.
இவர்கள் இருவருடைய மரபணு மாதிரிகளும் இப்ராஹிம் என்பவரின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளமை சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை, நீர்கொழும்பு தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியது அச்சி மொஹமது மொஹமது அஸ்துன் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஷங்ரி–லா நட்சத்திர விடுதியில் மேற்கொள்ளப்பட்ட இரு குண்டுத்தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட 36 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் அங்கு குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களில் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் சஹரான் ஹாசிமும் ஒருவர் என்றும் அவர் அத்தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
எனினும் அத்தாக்குதலில் உயிரிழந்தவர் அவர் இல்லையென புலனாய்வு தகவல்கள் தெரிவித்திருந்தன. இதனை உறுதி செய்வதற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சஹரானின் சகோதரியின் இரத்த மாதிரியை பரிசோதனை செய்ய குற்றப்புலனாய்வு பிரிவு தீர்மானித்தது.
அதன்பிரகாரம் ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் சஹரான் ஹாசிம் என்பது மரபணு பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






