கனடாவின் வடமேற்கே அமைந்துள்ள யூகொன்பிராந்தியத்தில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விமான விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கனேடிய போக்குவரத்து பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தலைநகர் வைட்ஹோர்சில் உள்ள விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒற்றை இயந்திரத்தை கொண்ட சிறியரக விமானம், புறப்பட்டு சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து காட்டுப்பகுதியினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
அலாஸ்கா நோக்கி புறப்பட்டுச் சென்ற அந்த தனியார் விமானம், குறிப்பாக ஓடுபாதையில் இருந்து சுமார் 600 மீற்றர் தூரத்தினுள்ளேயே வீழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விமானம் வீழ்ந்ததும் அது தீப்பற்றிக்கொண்டதாகவும், அந்த விமானத்தில் இருவர் இருந்த நிலையில், இருவரும் உயிரிழந்து விட்டதாகவும் கனேடிய போக்குவரத்து பாதுகாப்புத்துறையின் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
எட்மன்டனைத் தளமாக கொண்டுள்ள கனேடிய போக்குவரத்து பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட விசாரணையாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.





