முதலாவது ஜெனிவா என்றால் என்ன என்பதனை அதை அதுவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இரண்டாவது இலங்கை அரசாங்கம் ஜெனிவாவை எவ்வாறு கையாண்டு வருகிறது என்பதனை அந்த தளத்தில் வைத்து ஆராய வேண்டும். மூன்றாவது தமிழ் மக்களின் நோக்கு நிலையில் இருந்து கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஜெனிவா எவ்வாறு கையாளப்பட்டு வருகிறது என்று பார்க்க வேண்டும.
இம்மூன்றிலும் இக்கட்டுரையானது மூன்றாவதை அதாவது தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜெனிவா கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வாறு கையாளப்பட்டு வருகிறது என்ற விடயப்பரப்பின் மீது தனது கவனத்தை குவிகின்றது.
தமிழ் மக்கள் ஜெனீவாவில் ஒரு தரப்பு அல்ல. ஜெனீவா என்பது அரசுகளின் அரங்கம். அங்கே அரசுகள்தான் தீர்மானத்தை எடுக்கின்றன. தமிழ் மக்கள் ஒர் அரசற்ற தரப்பு. எனவே ஜெனீவாவில் உத்தியோக பூர்வ தரப்பாக முழு அதிகாரத்தோடு தமிழ் மக்கள் பங்குபற்ற முடியாது. ஆனால் அரசற்ற தரப்புக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பரப்புகளில் தமிழ் மக்கள் செயற்படலாம். உதாரணமாக side events என்று அழைக்கப்படும் பக்க நிகழ்வுகளில் பங்குபற்றலாம், இது தவிர ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கீழ்வரும் treaty bodies என்று அழைக்கப்படும் குழுக்களுக்கூடாக தமது முறைப்பாடுகளை முன்வைக்கலாம். மேற்படி குழுக்கள் மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய உடன்படிக்கைகளை ஏற்றுக் கையொப்பம் இட்ட நாடுகளைக் கண்காணிக்கும் சுயாதீனமான நிபுணர்களைக் கொண்டிருப்பவை. இக்குழுக்களிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கூடாக நிழல் அறிக்கை–shadow reports- என்றழைக்கப்படும் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம். இவற்றுடன். ஜெனீவாவின் பிரதான அரங்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது அமைப்புகளின் ஊடாக பங்குபற்றி இரு நிமிடங்கள் உரையாற்றலாம். இவை தவிர ஜெனீவாவில் உள்ள ஐ.நா பிரதிநிதிகளை உத்தியோகப் பற்றற்ற விதங்களில் சந்தித்து உரையாடலாம். இவ்வாறான சந்திப்புக்களில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளையும் அழைத்துச் செல்லலாம்.
எனினும் மேற்படி சந்திப்புக்கள் செயற்பாடுகள் மூலம் ஜெனீவாவின் உத்தியோகபூர்வ தீர்மானத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாமா என்ற கேள்வி இங்கு முக்கியம். கடந்த எட்டு ஆண்டுகளாக ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளால் தமிழ்த் தரப்பு பெற்றுக் கொண்டவை எவை? என்ற கேள்விக்கு ஒரு தொகுக்கப்பட்ட முழுமையான ஆய்வு அவசியம். ஒவ்வொரு ஜெனீவாக் கூட்டத்தொடரிலும் என்ன நடக்க வேண்டும் என்பதற்குரிய நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிடும். இதில் பங்குபற்றும் நாடுகளின் பிரதிநிதிகளும் அந்தந்த நாடுகளின் தலைநகரங்களில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் எடுத்த முடிவுகளை வெளிப்படுத்துபவர்கள்தான். அவர்களால் முடிவுகளைப் பெரியளவில் மாற்றவியலாது. எனவே ஜெனீவாவிற்கு வரும் ராஜதந்திரிகளின் முடிவுகளில் மாற்றங்களை அல்லது தாக்கத்தை ஏற்படுத்துவது என்று சொன்னால் அதை ஜெனீவாவில் செய்வதற்குப் பதிலாக அந்தந்த நாடுகளில் தலைநகரங்களுக்குச் சென்று அங்கு வைத்துச் செய்ய வேண்டும். அங்கேயுள்ள கொள்கை வகுப்பாளர்களை நோக்கி லொபி செய்ய வேண்டும்.
உதாரணமாக, ஜெனீவாவை மட்டும் ஒரே மையமாகக் கருதக் கூடாது ஜெனீவாவை தாண்டி ஐ.நா வின் பாதுகாப்புச் சபைக்கும் பொதுச் சபைக்கும் தமிழர்களின் விவகாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொன்னால் அதற்கு எங்கே வேலை செய்ய வேண்டும்? வொஷிங்ரனிலும், புதுடில்லியிலும் ஐரோப்பியத் தலைநகரங்களிலும் வேலை செய்ய வேண்டும். உலகம் முழுவதிலும் உள்ள மனிதநேய அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள், மத நிறுவனங்கள், ஊடகங்கள், அரச சார்பற்ற அமைப்பக்கள், அவ்வவ் நாடுகளிலுள்ள எதிர்க்கட்சிகள் என்று அரசுகளிற்கு வெளியிலும் லொபி செய்ய வேண்டும்.
இலங்கைத் தீவில் நடைபெற்றது இனப்படுகொலையே என்று தமிழகத்தில்
ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார். வட மாகாண சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இவ்விரு தீர்மானங்களும் மகத்தான இரு தொடக்கங்கள். இரண்டுமே பெருந்தமிழ் பரப்பில் உள்ள இரு வேறு சட்ட மன்றங்களால் நிறைவேற்றப்பட்டவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு சட்ட மன்றங்களின் தீர்மானங்கள் அவை. அதனால் அவற்றுக்கு ஐனநாயக ரீதியாக அங்கீகாரமும் அந்தஸ்தும் அதிகம். தமிழகம், ஈழத்தமிழர்கள் என்ற இரண்டு சனத் தொகையையும் கூட்டினால் பெருந் தழிழ் பரப்பில் ஒப்பிட்டளவில் ஆகப் பெரிய சனத் தொகையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அவை. எனவெ அவற்றுக்கு உலகத்தின் அங்கீகாரம் உண்டு. அவை அரசியல் தீர்மானங்கள். எனவே அவற்றுக்கு சட்ட வலுவுண்டு. அதை அடிப்படையாக வைத்து உலகப் பரப்பில் தமிழ் மக்கள் நீதிக்கான தமது போராட்டத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்லலாம். ஆனால் அதற்குரிய வேலைகளை வடமாகாண சபையும் செய்யவில்லை. விக்னேஸ்வரனும் செய்யவில்லை, ஜெயலலிதாவின் ஆதுரவாளர்களும் செய்யவில்லை.
எனவே ஜெனீவாவும் உட்பட ஏனைய உலக அரங்குகளில் ஈழத்தமிழர்கள் நீதிக்கான தமது போராட்டத்தை முன்னெடுப்பது என்று சொன்னால் அப்போராட்டங்களை முதலில் பெருந் தமிழ் பரப்பிற்கு விஸ்தரிக்க வேண்டும். அடுத்த கட்டமாக உலகப்பரப்பிற்கு விஸ்தரிக்க வேண்டும். அதற்கு எல்லா இந்திய தலைநகரங்களிலும், உலகத் தலை நகரங்களிலும் லொபி செய்ய வேண்டும்.
ஐ.நா வைக் கையாள்வது என்பது அதன் பிரயோக அர்த்தத்தில் ஐ.நாவுக்கு வெளியே தான் இருக்கிறது. ஆதற்கு வேண்டிய உலகலாவிய ஒரு கட்டமைப்பு தமிழ் மக்களிடம் உண்டா? இல்லை. ஆனால் இலங்கை அரசாங்கத்திடம் உண்டு. ஓர் அரசு என்ற அடிப்படையில் அரசுக்கும், அரசுக்குமிடையிலான கட்டமைப்பு சார்ந்த ஓர் உலகலாவிய வலைப்பின்னல் அரசாங்கத்திற்குண்டு. கடந்த எட்டு ஆண்டுகளாக ஜெனிவாத் தீர்மானங்கள் இலங்கை அரசுக்கு நோகாமல் வெளிவரக் காரணமே அதுதான். ஓர் இனப் படுகொலையையும் செய்து விட்டு கடும் போக்குடைய சிங்கள பௌத்தர்கள் ஜெனீவாவுக்கு போய் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் மேற்சொன்ன அரசுடைய தரப்பு என்ற பலம்தான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜெனீவாவின் பிரதான அரங்குகளில் பெருமளவிற்குச் செயற்பட்ட சிங்கள, பௌத்த கடும் போக்காளர்கள் கடந்த ஆண்டு தொடக்கம் பக்க அரங்குகளிலும் தீவிரமாக செயற்படத் தொடங்கி விட்டனர். பிரதான அரங்கிற்கு வெளியே பக்க அரங்குகளில் ஒர நிகழ்வுகளில் தமிழ் லொபிக்கு எதிராக சிங்கள லொபியும் முடுக்கு விடப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படை பிரதானியாகிய சரத் வீரசேகர போன்றவர்கள் கடந்த ஆண்டிலிருந்து தமிழ் லொபியை நெற்றிக்கு நேரே சந்திக்கத் தொடங்கி விட்டார்கள். சிவாஜிலிங்கத்துக்கு இனி வேலை அதிகம்?
அரசாங்கமும் அதன் ஏனைய நிறுவனங்களும் ஜெனீவாவின் பிரதான அரங்கில் வேலை செய்ய, சரத் வீரசேகர போன்றவர்கள் பக்க நிகழ்வுகளில் இறங்கி வேலை செய்கிறார்கள். அது மட்டுமல்ல இம்முறை அரசாங்கம் ஜெனீவாத் தீர்மானத்தை பொறுத்த வரை இரண்டுபட்டு நிற்பதாக ஒரு தோற்றம் காட்டப்பட்டது. ஆனால் இந்த ரணில், மைத்திரி பிளவு கூட அரசாங்கத்துக்கு சாதகமானதே. எப்படியென்றால் மைத்திரியின் எதிர்ப்பைக் காரணம் காட்டி மேற்கு நாடுகள் ரணிலை மேலும் பலப்படுத்தவே முயற்சித்தன. இப்படிப் பாரத்தால் சிங்கள, பௌத்த பெரும் தேசிய வாதிகள் மூன்றாகப் பிரிந்து செய்ற்படுவது போல தோன்றினாலும் அதன் இறுதி விளைவைப் பொறுத்த வரை சரத் வீரசேகரவும் சரி, ரணிலும் சரி, மைத்திரியும் சரி, இறுதியிலும் இறுதியாக அரசாங்கத்தையே பாதுகாக்கிறார்கள். ஆனால் தமிழ் தரப்பு?
தமிழ் மக்கள் ஜெனீவாவில் ஒரு தரப்பும் அல்ல. அதே சமயம் ஒன்றுபட்ட தரப்பும் அல்ல. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பானது ஜெனீவாவில் மூன்றாகப் பிரிந்து காணப்படுகிறது. கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தமிழ் மக்களின் உத்தியோக பூர்வ பிரதிநிதி போல ஜெனீவாவில் நிற்கிறார். வழங்கப்படுவது கால அவகாசமல்ல. ஐ.நா வின் கண்காணிப்பதற்கான கால நீட்சியே என்று அவர் ஒர் அப்புக்காத்து விளக்கத்தை தருகிறார். அவரோடு ஒரு கத்தோலிக்க மதகுருவும் காணப்பட்டார். முன்பு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதானியாக அறியப்பட்டவர் அவர். சுமந்திரனோடு அவர் காணப்படுவது புலம்பெயர் தமிழர் மத்தியில் உள்ள பிளவுகளைக் காட்டுகிறது. இது ஒரு புறம். இன்னொரு புறம் மற்றொரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இவர்களோடு பெருமளவுக்குச் சேராமல் தன்னைத் தனித்துக் காட்ட முயல்கிறார்.
இவை தவிர கூட்டமைப்பின் அங்கமாக உள்ள ரெலோவும் புளட்டும் ஏனைய மூன்று கட்சிகளோடு இணைந்து அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்கக் கூடாது என்று கூறுகின்றன. இவ்வாறு கூறும் ரெலோவின் பிரமுகர் சிவாஜிலிங்கம் -அவர்தான் மேற்படி கட்சிகள் ஐந்தையும் ஒருங்கிணைப்பதற்குக் கூடுதலாக உழைத்தவர் என்றும் தெரிகிறது- அவர் வடமாகாண ஆளுநரிடம் ஐ.நா.வில் கொடுப்பதற்கென்று ஒரு மனுவைக் கையளித்திருக்கிறார். ஆளுநர் எனப்படுபவர் அவரது பதவியின் நிமித்தம் அரசுத் தலைவரின் முகவர்தான். வடபகுதி மக்களை அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அப்படிப்பட்ட ஒருவரிடம் ஏன் அனந்தியும் சிவாஜிலிங்கமும் மனுக் கொடுத்தார்கள்? ஒரு புறம் ஆளுநருக்கு மனுக் கொடுக்கிறார்கள். இன்னொரு புறம் ஐ.நா வுக்கு மனுக் கொடுக்கிறார்கள்.
இவர்களைத்தவிர ஜெனிவாவில் வழமையாகக் காணப்படும் மற்றொரு தரப்பாகிய கஜேந்திரகுமாரும் அங்கே போயிருந்தார். தமிழகத்திலிருந்தும் ஒரு பேச்சாளர் வந்திருந்தார். மேற்கண்ட அனைத்து தமிழ் தரப்புகளும் ஒரு மையத்திலில்லை. ஒரே விதமான கோரிக்கைகளை முன்வைக்கும் தரப்புக்கள் கூட ஓரணியாக இல்லை. பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் இம்முறை தமது கோரிக்கைகளைப் பொறுத்தவரை ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. ஆனால் செயல் ரீதியாக அவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை. ஒரு பொது வேலைத் திட்டமும் இல்லை. ஒரு பொதுவான வழி வரைபடமும் இல்லை. எல்லாத் தரப்புக்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மைய அமைப்பும் மையப் பொறிமுறையும் இல்லை.
ஆக மொத்தம் தமிழ் தரப்பு ஒருமித்த தரப்பாக இல்லை. ஒருங்கிணைந்த வேலைத்திட்டமும் இல்லை. கடந்த எட்டு ஆண்டுகால உழைப்பைக் குறித்துத் தொகுக்கப்பட்ட ஒரு மீளாய்வும் இல்லை. அரசாங்கத்தை ஐ.நா கண்காணிப்பதென்றால் அதற்கு கால அட்டவணையுடன் கூடிய ஒரு பொறிமுறை வேண்டும் என்று தமிழ்த் தரப்புக் கேட்கிறது. ஆனால் ஜெனீவாவை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் தமிழ் தரப்பிடம் கால அட்டவணையோடு கூடிய ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அல்லது மையப் பொறிமுறையும் ஏதாவது உண்டா?
நிலாந்தன்