அந்தவகையில், “மகேந்திரனின் புகழ் இன்னும் நூறு வருடங்கள் கடந்தாலும் சாகாது” என நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இயக்குநர் மகேந்திரனின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு என தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘முள்ளும் மலரும்’ என்று சொன்ன நீங்கள் மீண்டும் மலர வேண்டும். ‘உதிரிப்பூக்கள்’ எடுத்த நீங்கள் எங்கள் இதயத்தில் என்றும் உதிராப்பூ என இயக்குநரும் நடிகரான சேரன் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் இரங்கல் செய்தியில், “முன்னோடி திரைப்பட இயக்குநர் மகேந்திரனின் மறைவை அறிந்து மிகவும் வருந்துகிறேன். மகேந்திரனும், அவரது திரைப்படங்களும் எங்கள் இதயங்களில் என்றும் வாழும்” என கூறியுள்ளார்.
அத்துடன், இயக்குநர் சீனுராமசாமி, “இலக்கியப் பூ ஒன்று இன்று உதிர்ந்துவிட்டது” எனக் கூறினார். அதேநேரம் “என்னை வழிகாட்டிய படைப்பாளியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கின்றது. இயக்குநர் மகேந்திரன் போன்று எவரும் இல்லை” என நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.
இயக்குநரும் நடிகருமான மனோபாலா, “ஒரு நாள் முன்னதாக அவரை சந்தித்தேன். அருமையான மனிதர். அவர் தன் கண்களை திறந்து மூடினார். இளைஞர்களுக்கான முன்னோடியான அவரது ஆத்மா அமைதியடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் காலத்தின் ஆகச்சிறந்த படைப்பாளரான மகேந்திரன் அவர்களுக்கு எனது வேண்டுதலும், மரியாதையும் என இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு திரையுலகினர் பெரும்பாலானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.