தாய்லாந்து ஆட்சி முறையில் ராணுவத்தின் தலையீட்டை நீக்கி, முழுமையாக மக்களாட்சி இடம்பெறும் வகையில் 500 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அடுத்தடுத்து வெளியான தேர்தல் அறிவிப்புகளும் தாமதமடைந்து கொண்டே இருந்த நிலையில் எதிர்வரும் 24-3-2019 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் பியு தாய் கட்சியை சேர்ந்த சுதாரத் கி யுராபான் என்ற பெண் வேட்பாளரும், முன்னாள் பிரதமரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான அபிஷிட் வெஜா ஜிவா என்பவரும் பிரதமர் போட்டிக்கான பிரதான போட்டியாளர்களாக தேர்தல் களத்தில் உள்ளனர்.
தற்போதைய பிரதமர் பிரயூத் ஷான்-ஓ-ஷா சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இவர்களை தவிர பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இதர வேட்பாளர்களில் தாய்லாந்தின் பிரபல தொழிலதிபரும் அந்த நாட்டின் கால்பந்து விளையாட்டுத்துறை பிரபலமுமான பினிட் ந்கார்ம்பிரிங் என்னும் திருநங்கையும் முக்கிய இடத்தில் உள்ளார்.
தாய் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பினிட் ந்கார்ம்பிரிங் வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், பிரபல மொடல் அழகியான சக்காரின் சிங்கானூட்டா என்ற திருநங்கையுடன் வீதிவீதியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.
இதற்காக பாலின் ந்கார்ம்பிரிங் என தனது பெயரையும் அவர் மாற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






