
அத்துடன் எமது நாட்டின் சுயாதீனத்தன்மை பேணப்பட வேண்டும் என்பதோடு அரசாங்கம் என்ற வகையில் அரசாங்க நடவடிக்கைகளுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை, மீகஹதென்ன பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டை 1505 முதல் ஆக்கிரமித்திருந்த ஏகாதிபத்தியவாதிகள் அன்றைய ஆக்கிரமிப்பு தன்மையை நூறு வீதமாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். இத்தகைய சந்தர்ப்பங்களின்போது நாம் சுயாதீனமான தேசம் என்ற வகையில் எழுந்திருக்க வேண்டும்.
எமது நூற்றுக்கணக்கான வருடங்கள் பழைமையான வரலாறு பற்றி நாம் அறிவோம். 1505 முதல் 1948 ஆம் ஆண்டு வரை இங்கு இருந்த வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் அடித்து விரட்டப்பட்டனர்.
நாம் 1948ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டிருந்ததைப் போன்று வெளிநாட்டவர்களுக்கு அடிமைப்பட்டிருக்க தயாராக இல்லை. எமக்கு பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. உலக நாடுகளில் இருந்து நாம் வளங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் அறிவை பெற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் பல விடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
என்றாலும் இந்த நாட்டின் அரச நிர்வாகம், சட்ட நிர்வாகம் மற்றும் அரசியலமைப்பை நாட்டு மக்களின் தேவைக்கேற்ப நாட்டு மக்களின் விருப்பத்தின் பேரில் அல்லாது வேறு எந்த வகையிலும் அதனை மாற்றுவதற்கு நான் தயாராக இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
