புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் இந்திய போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டார்.
பின்னர் அவர் நேற்று விடுவிக்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். சென்னையைச் சேர்ந்த அபிநந்தனின் வீரம் மற்றும் துணிச்சலுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் நேற்று(வியாழக்கிழமை) மாலை சுவப்னா தேவி என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தைக்கு அபிநந்தனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த செயல் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குழந்தையின் தாத்தா ஜெனிஷ் புதானி கூறுகையில், ‘எனது மருமகளுக்கு நேற்று மாலை பிரசவ வலி ஏற்படவே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அச்சமயம் மருமகள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் அபிநந்தனின் தொடர்ச்சியான தகவல்களை தான் செய்தியில் பார்த்துக் கொண்டிருந்தோம்.
பின்னர் சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து இந்திய போர் விமானி அபிநந்தனின் பெயரை குழந்தைக்கு சூட்டினோம். இதனால் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம்’ என கூறினார்.
