ஆசிய வலயத்தில் பெரும் தீவிரவாத அச்சுறுத்தலை மேற்கொண்டுவரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அல் அசாரை கருப்பு பட்டியலில் சேர்க்க அமெரிக்கா புதிய முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதனை தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து,
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையகத்தின் கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. ஆனால் சீனா தனது வீட்டோ அதிகாரததைப் பயன்படுத்தி, இந்த முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை இட்டு வருகின்றது.
இந்தநிலையில், மசூத் அசாரை ஐ.நா. பாதுகாப்பு ஆணையகத்தின் கருப்பு பட்டியலில் சேர்க்க அமெரிக்கா புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையகத்திற்கு வரைவு தீர்மானத்தை அனுப்பியுள்ளது.
இந்த தீர்மானம் நிறைவேறினால் மசூத் அசாருக்கு எதிராக ஆயுத தடை, பயண தடை விதிக்கப்படுவதோடு அவரது சொத்துக்களும் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.





