தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் பிரிவு தலைவியும் நல்லூர் பிரதேசசபை உறுப்பினருமான வாசுகி சுதாகரன் தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த மாநாடு இடம்பெற்றுள்ளது.
சர்வதேச மகளிர் தின பெண்கள் எழுச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் இருந்து பேரிகை சை முழங்க விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதுடன், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் தூபிகளில் மலரஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொடியினை கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றிவைத்தார்.
அதனையடுத்து மண்டபத்திற்குள் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு மாவீரர் சோதியாவின் திருவுருவப்படத்திற்கு அவரது தாயாரும் தியாகத்தாய் அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு அவரது பேத்தியாரும் விளக்கேற்றி மலர்மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து அகவணக்கம், மங்கல விளக்கேற்றலையடுத்து நிகழ்வில் பங்கேற்றவர்கள் ஒருமித்த குரலாய் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். அதனையடுத்து வரவேற்புரை, வாழ்த்துரை, தலைமையுரை என்பன நடைபெற்ற நிலையில் மகளிர் எழுச்சிப் பிரகடனமும் வாசிக்கப்பட்டது.
