கருணாநிதி கற்றுத்தந்த வழியிலேயே ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.தஞ்சையில் தி.மு.க. வேட்பாளர்களை இன்று (புதன்கிழமை) அறிமுகம் செய்து வைத்து, அங்கு இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எனக்கு எவ்வளவு பொறுப்புகள், பதவிகள் கிடைத்தாலும் கருணாநிதியின் மகன் என்பதற்கு எதுவுமே ஈடாகாது. கருணாநிதி கற்றுத்தந்த வழியில் நின்றே ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன்.
தஞ்சை மண் என்பது கருணாநிதியின் மண். அதனால் தான் இங்கு வந்து நான் வாக்குக் கேட்கிறேன். ஆளும் பா.ஜ.க.வினது ஆட்சியில் மக்களை பற்றி சிந்தித்துச் செயற்படக்கூடிய தலைவர்கள் இல்லை.
எதிர்வரும் தேர்தலில் மத்தியில் பா.ஜ.க, மாநிலத்தில் அ.தி.மு.க.வினது ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் நிலை நிச்சயம் ஏற்படும். எமது கூட்டணி ஆட்சி மலரும்” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டார்





