தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி ஆகியவற்றை பொலிஸார் மிக அலட்சியமாக வெளியிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை தெரியாமல் பொலிஸார்செயல்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பேட்டியளித்த மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன், தவறுதலாக பெண்ணின் பெயர் வெளியாகிவிட்டதாக கூறினார்.
இதனை அடுத்து, வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றிய அரசாணையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படிக்கும் கல்லூரி, முகவரி என்று முழு விபரமும் அப்பட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் பயந்துபோய் புகாரளித்துவிடக்கூடாது என்பதற்காக பெயர்கள் இப்படி அப்பட்டமாக வெளியிடப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் இன்று விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அரசு தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதற்காகவும், வழக்கின் ஆரம்ப நிலையிலேயே 4 பேருக்கு மட்டுமே தொடர்பு என்று கூறியதற்காகவும் மாவட்ட எஸ்.பி மீது நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டனர்.
