02.03.2019}
- நிறங்களின் அழுகையை
ஆழம் நிறைந்த புன்னகையை
உன் தூரிகைகள் கரைத்திருக்கின்றன
அவற்றின் பரிமாணங்கள்
உணர்ச்சிகளோடு இரவுகளையும்
பகல்களையும் ஒரு தூரிகையில்
குழைத்ததாக வேண்டும்
உன்னால் வரையப்பட்ட
வட்டங்களின் மொழிகள்
கோடுகளின் இசைகள்
புள்ளிகளின் அபிநயங்கள்
பிரதிகளின் மௌன வார்த்தைகள்
நிறங்களில் முகிழ்த்திருப்பதை
ஞாபகமூட்டக்கூடும்
இயற்கையும் நிழல்களும் புரட்டாத
பக்கங்களில் நீ
தனிமையை வரைந்துகொண்டிருந்தது
என்னில் ஒரு வலியை
ஓவியமாக்குகின்றது
ஒரு நீலப் பட்டாம்பூச்சியின் இறப்பாக
மென்மையின் தீராத நிலைப்பை
விட்டுச்செல்கின்றாய்
கரவெட்டியிலும்
ரொறண்ரோவிலும் நிறங்களில்
இல்லாத வன்முறைகளை
முரண்பாடுகளை அவை மீண்டும்
மீண்டும் வரைந்திருக்கலாம்
நிறங்களின் அழுகையை ஆழம் நிறைந்த புன்னகையை உன் தூரிகைகள் கரைத்திருக்கின்றன
நீ வரைந்த விலை மதிப்பில்லா
பிரதிகளுடன்
உனது பயணங்கள், உணவு மேசை
இசைகள் ,தூக்கங்கள்
நண்பர்கள்
எதிரொலிப்பதையும் வரைய
உன் தூரிகைகளுக்கு இனி
கைகள் இல்லை
வரலாறு அடுக்கிக்கொண்டே
விரைகின்றது
அது ஒருநாளும்
ஓவியங்களைப் புதைப்பதில்லை
அஸ்மா பேகம்
