நிக்கோலஸ் மடுரோ தலைமையிலான அரசாங்கத்துக்கு அளித்துவந்த பல உதவிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள வெனிசுவேலா நாட்டின் சுமார் 700 கோடி டொலர் மதிப்பிலான பெற்றோல் களஞ்சியங்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தங்கள் நாட்டின் மருத்துவ பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை டிரம்ப் திருடி விட்டதாக நிக்கோலஸ் மடுரோ கூறியுள்ளார்.
வெனிசுவேலாவின் தேசிய மருந்து தயாரிப்புத்துறை வளர்ச்சி திட்டத்தை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய மடுரோ, ‘நம் நாட்டில் மருந்துகள் தயாரிப்பு, மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கிய மருந்துகள், மருந்தகங்கள் மற்றும் நோயாளர் காவுகை இயக்கம் ஆகியவற்றுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 கோடி டொலர் பணத்தை டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திருடி விட்டது.
வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த மோசமான குற்றச்செயலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மட்டுமே காரணம்’ என்று அவர் சாடியுள்ளார்.






