குறித்த சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
ஒஷாவாவில் ஹார்மொனி வீதி மற்றும் ஒலிவ் வீதிப் பகுதியில், சாலையில் அங்கும் இங்குமாக ஒழுங்கின்றிப் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் ஒன்றினை அவதானித்த அதிகாரிகள், அதனை தடுத்து நிறுத்த முயன்ற போது, அது அங்கிருந்து நெடுஞ்சாலை 401இனுள் நுளைந்து தப்பியோடிச் சென்றுள்ளது.
அதனை அடுத்து டூர்ஹம் பொலிஸார் உலங்குவானூர்தி அங்கு அழைக்கப்பட்ட நிலையில், மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த அந்த வாகனத்தை, உலங்குவானூர்தியின் உதவியுடன் அதிகாரிகள் துரத்தியுள்ளனர்.
தரை மார்க்கமாக துரத்திச் செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தில் ஏற்படும் என்பதனால், குறித்த அந்த வாகனம் தொடர்ந்து உலங்குவானூர்தியால் பின்தொடரப்பட்டது.
எனினும் குறித்த அந்த வாகனம், கிங்ஸ்டன் வீதியிலிருந்து லோறன்ஸ் அவனியூ ஈஸ்ட்டுக்குச் சென்று, ஸ்காபரோ கோல்ஃப் கிளப் வீதியினுள் சென்று, பள்ளம் ஒன்றினுள் வீழந்த நிலையில், அதன் சாரதி அதிலிருந்து இறங்கி தப்பியோடிச் சென்று வீடு ஒன்றின் பின் வளவினுள் நுளைந்த போது, அங்கு கால் நடையாக வந்த பொலிஸாருடன் அவர் முரண்படடதாக கூறப்படுகிறது.
அங்கிருந்தும் அவர் தப்பித்து வீட்டின் முன்புறம் ஊடாக ஓடிச் செல்ல ஆரம்பித்த நிலையில், அதிகாரிகளும் அவரைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர்.
ஜோவன் வாடோர்ன் எனப்படும் அந்த நபரை கைது செய்த பொலிஸார் அவர் மீது, கடத்தலுக்காக கொக்கெய்ன் போதைப் பொருள் வைத்திருந்தமை, வாகனத்தை ஆபாயகரமாக செலுத்திச் சென்றமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை குறித்த அந்த வாகனத்தில் பயணித்த வேறு இருவர் நிபந்தனைகள் எவையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
