தந்தைக்குக் காட்டும் பரிவு மறுக்கப்பட மாட்டாது. அது உன் பாவங்களுக்கு களுவாயாய் விளங்கும். உன் துன்ப நாளில் கடவுள் உன்னை நினைவு கூருவார்| பகலவனைக் கண்ட பனிபோல் உன் பாவங்கள் மறைந்தொழியும். தந்தையரைக் கைவிடுவோர், கடவுளைப் பழிப்பவர் போலாவார்| அன்னையர்க்கு சினம் மூட்டுவோர் ஆண்டவரால் சபிக்கப்படுவர்.”
குழந்தைப் பருவம் போன்றே முதுமைப் பருவமும் அமைகின்றது என்பார்கள். அது அன்புக்காக ஏங்கும் பருவம். தன் பிள்ளைகளுடனும், பிள்ளைகளின் பிள்ளைகளுடனும் சேர்ந்து கொஞ்சிக் குலாவி வாழ விரும்பும் வயதுக் காலம். ஆனாலும், முதுமை அவர்களது நினைவுக்குத் தடை போடும் வாய்ப்புக்கள் அதிகம். இதனால் நமக்கு எரிச்சலையும். அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகமாக அமையும் வாய்ப்பும் உண்டு. பொறுமை நம்மைக் கட்டிப் போட வேண்டும்! அவர்களது நிலைமையைப் பரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டு வாழப் பழக வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அதை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்ள முன்வந்தால் நமது மகிழ்ச்சிக்கு அளவிராது.
பத்தாம் நிலை
இயேசுவின் ஆடைகளைக் களைகிறார்கள் .. ..
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
“எனக்குற்ற மானக்கேடு எந்நேரமும் என் கண் முன்னே நிற்கிறது. வெட்கம் என்னை முகம் கவிழச் செய்கிறது.
“என்னை நிந்தித்துத் தூற்றுபவன் பேசுவதைக் கேட்கும்போது(ம்), என் எதிரியையும், பகைவனையும் நான் பார்க்கும்போது(ம்) வெட்கிப் போகிறேன்.”
(சங். 43 : 18,16)
ஆடையில்லா மனிதன் அரை மனிதன் - அவமானத்துக்குரிய மனிதன் - பரிகாசத்துக்குரிய மனிதன்.
ஆடம்பர இடத்திலே ஆரவாரமில்லாது, கந்தலாக உடுத்தினாலும் அவன் ஆடையில்லா மனிதனே! அரை மனிதனே!!
ஆளைவிடவும் ஆடையின் ஆடம்பரத்திற்கே மதிப்பையேற்றும் மனித நாகரீகம் இங்கே - இது கம்பீரமான பிச்சைக்காரர்களின் போலி வேடம்.
கற்பில்லாக் கண்களுடன் ஆடையோடு ஆளை உரித்துப் பார்க்கும் காமக் கண்கள் நம்மவர் கதிர் வீச்சுக் கண்கள்.
நிர்வாணம் பார்வையில் மட்டுமல்ல, மனிதரிவர் மனத்திரையிலும்தான். ஒழுக்கம் ஒழுங்காக இல்லாதவரை அவமானமும், தலை குனிவும் எங்கே அழியப்போகிறது? எருமை இனத்திற்கே சேற்று நீர்தானே சந்தனமும், பன்னீரும்?
ஆழுக்குற்ற கிணற்று நீர் இறைக்கப்படாதவரை ஊற்று நீருக்கு அதிலே வேலையேது?
மனம் தெளியட்டும் - மனித மாண்பை மதிக்கட்டும் - உணர்வுக்கும் உணர்ச்சிகளுக்கும் வேலி ஒன்றை அமைக்கட்டும்.
பிச்சை கூடத் தரும்போது, அதைக் கொச்சையாக்கிப் போடாமல், நீட்டும் கரம் வெட்காது பெற்றுக் கொள்ளும் காலம் வரவேண்டும்.
சிந்திப்போம்:
உணர்விலே – உணர்ச்சியிலே, சொல்லிலே – சிந்தனையிலே கற்பைக் காத்து நடக்க எனக்கு வரம் தந்த இயேசுவே உமக்கு நன்றி!
அடுத்தவனை எனது ஆடம்பரத்தால் கூனிக் குறுகச் செய்யாமலும், கந்தை உடுத்தினாலும் அடுத்தவனும் மனிதனே என்று அன்போடு பழகிப் பண்போடு நடக்கவும் அருள் தந்த இறைவா உமக்கு நன்றி!
பிச்சை எடுப்பவனும் என்போன்ற மனிதனே என்று ஆதரிக்க வரம் ஈந்த இறைவா நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்
