13. “தந்தையரை மதிப்போர் பாவங்களுக்கு கழுவாய் தேடிக் கொள்கின்றனர்.அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர்.
தந்தையரை மதிப்போருக்கு தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்| அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும். தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடு வாழ்வர்! ஆண்டவருக்குப் பணிந்து நடப்போர் தங்கள் அன்னையருக்கு மதிப்பு அளிப்பர். தலைவர் கீழ்ப் பணியாளர்கள்போல் அவர்கள் தம் பெற்றோருக்குப் பணி செய்வார்கள்”
அன்னையும் பிதாவும் முன்னறியும் தெய்வங்களாக அமைகின்றனர். அவர்களுக்குப் பின்னர் தான் நாம் தெய்வத்தையே அறிய வருகின்றது. அது கூட அவர்கள் சொல்லித்தான் தெரிய வருகின்றது. அவர்களே நம் இயலாத குழந்தைப் பருவத்தில் நம்மைக் காக்கும் தெய்வங்களாக அமைகின்றனர். ஆனாலும் நம்மால் எந்த அளவுக்கு நமது முழு முதற் கடவுள்களான பெற்றோரை கனம் பண்ணுகின்றோம் என்பதை எண்ணிப் பார்க்க இந்த நாட்கள் நமக்கு உதவ வேண்டும். குழந்தைகள் இல்லாத பெற்றோர்கள் முதியோர் இல்லங்களைத் தஞ்சம் அடைவது ஏற்றுக் கொள்ளக் கூடியதே! இருந்தும் சகல வசதிகளோடும் வாழும் பிள்ளைகளின் பெற்றோர்கள் கவனிப்பாரற்று வாடுவதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?
எட்டாம் நிலை
இயேசு அழுது புலம்பும் ஜெருசலேம் பெண்களுக்கு
ஆறுதல் கூறுகிறார் .. ..
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
“மரணத்தின் தளைகள் என்னை வளைத்துக் கொண்டன, பாதாளங்களின் கன்னிகள் என்னைக் சுற்றிக் கொண்டன. கவலைக்கும் துன்பத்திற்கும் நான் ஆளானேன்.
“நானோ ஆண்டவருடைய பெயரைக் கூவியழைத்தேன். ‘ஓ ! ஆண்டவரே என் உயிரைக் காத்தருளும் ’ என்று வேண்டினேன்.
“ஆண்டவர் கருணையும், நீதியும் உள்ளவர்; நம் இறைவன் இரக்கம் உள்ளவர். ”
(சங் 114 : 3 – 5 )
குறைகள் மனதின் கவலைகளாகின்றன. இயலாமையில் கவலை கண்ணீர் வரச் செய்கின்றது.
எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சம், என்ன செய்வது என்ற கவலையைத் தருகின்றது. ஒன்றுமே ஆகவில்லை என்றால் கண்ணீர் வருகின்றது.
கவலைப்படுவதில்தான் என்ன பயன்? உயரம்தான் ஒரு முழம் கூடுமா? கழன்றுபோன உடல் மயிர்தான் மீண்டும் வந்து ஒட்டுமா? கையைப் பிசைந்து நிற்பதைவிட, கையை எறிந்து வேலை செய்வதே நமக்குப் பிரச்சினையில் நன்மை தரும்.
தெய்வம் என்னை அழைத்தது. தாயின் கர்ப்பத்தில் என்னை அறிந்தது. எனக்கு வேண்டியது எதுவேன அவர் அறிவார். காலத்தில் - உரிய நேரத்தில் - வேண்டும் அருளைத் தருவார்.
வாழ்வோ - இல்லை சாவோ – தருவது அவரே என்பதைப் புரிந்து கொண்டால், கவலைகள் வாழ்வில் வருவதில்லை.
இயேசு இல்லா வாழ்வை எண்ணி ஜெருசலேம் மக்கள் அழுதார்களா? இல்லை, ஒரு நல்லவன் படும் வேதனை கண்டு குமுறி அழுதார்களா?
கவலையைப் போன்றே கருணையும் கண்ணீர் வரச் செய்யும்.
சிந்திப்போம்:
இன்னல் வரும்போது கவலைப்பட்டு நிற்பதைவிட்டு, உம் உதவியைப் பெற்று அதை வெற்றி கொண்டிட மன வலிமையைத் தந்த இயேசுவே உமக்கு நன்றி!
அடுத்தவர் துயரைக் கண்டு என் துயர் போல எண்ணிக் கலங்கும் கருணையை எனக்குத் தந்த இறைவா உமக்கு நன்றி!
வாழ்வை உம் கையில் கொடுத்துவிட்டு உம் பாதையில் செல்லும் ஆசையை எனக்குத் தந்தமைக்கு இறைவா உமக்கு நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்





