1.ஞானம் என்பது . . .
“ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது.
கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, முடிவில்லாக் காலத்தையோ யார்தான் கணக்கிட முடியம். வான வெளியின் உயரத்தையோ, நிலவுலகத்தின் அகலத்தையோ, ஆழ்கடலையோ, ஞானத்தையோ யார்தான் தேடிக் காண்பர்?
எல்லாவற்றுக்கும் முன்னர் ஞானமே உண்டாக்கப்பட்டதுடன் கூர்மதி கொண்ட அறிவுத் திறன் என்றென்றும் உள்ளது.
(உயர் வானிலுள்ள கடவுளின் வாக்கே ஞானத்தின் ஊற்று| என்றுமுள கட்டளைகளே அதை அடையும் வழிகள்)
ஞானத்தின் ஆணி வேர் யாருக்கு வெளியிடப்பட்டது? அதன் நுணுக்கங்களை அறிந்தவன் யார்? (ஞானத்தின் அறிவாற்றல் யாருக்குத் தெளிவாக்கப்பட்டது? அதன் பரந்த பட்டறிவைப் புரிந்து கொண்டவர் யார்?)
ஆண்டவர் ஒருவரே ஞானியாவார்| தன் அரியணையில் வீற்றிருக்கும் அவர் பெரிதும் அச்சத்திற்குரியவர்.”
எது சரி, எது தவறு? என்றும், நீதியானது எது, உண்மை எது, பொய் எது என்றும், தவறனது எது? என்று பிரித்தறியும் வல்லமை ஞானமாகும். ஞானம் இறைவனால் அருளப்படுகின்றது. அதற்கென்று விசேட கல்வி எதுவும் தேவையில்லை. படிப்பறிவில்லாதவன் கூட ஞானத்தை அடைந்து கொள்ள முடியும். திறந்த மனதும், அதற்கான ஆவலும் மனதில் இருந்தால், ஞானத்தை இறைவனிடம் இருந்து அடைவது கடினமாக இராது.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்
