எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் தனித்து நிற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு தவறானது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மேலும் இந்த முடிவானது அவரது எதிர்க் காலத்திற்கு உகந்ததாக இருக்காது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் 2018-க்கான மேன்மை மற்றும் மதிப்புமிக்க கூட்டுறவு விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அமைச்சர் அவர் இதனை தெரிவித்தார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், “கமல் தனித்து போட்டி என தெரிவித்திருப்பது அவருடைய அரசியல் எதிர்காலத்துக்கு உகந்தது அல்ல.
தனித்துப் போட்டியிட்டால், அந்தத் தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய மன உலைச்சலை அவருக்குக் கொடுக்கும்.
அவருடைய நலம் விரும்பிகள் யாரும் இதை ஆதரிக்க மாட்டார்கள் என்றார். மேலும் கமலுக்கு யாரோ தவறாக வழிக்காட்டுகிறார்கள், அதனால் தான் அவரை எச்சரிக்கிறேன்” என தெரிவித்தார்.





