சீனாவிலுள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு துருக்கி அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்திலுள்ள தடுப்பு முகாம்களில் Uighur இன மக்கள், தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையிலேயே குறித்த தடுப்பு முகாம்களை மூடுமாறு சீன அரசாங்கத்தை துருக்கி வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
உய்கர் இன மக்களை சிறைக்கைதிகளாக தடுத்துவைத்து சித்திரவதைக்குள்ளாக்கி அவர்களுக்கு அரசியல் ரீதியில் மூளைச் சலவை செய்யும் சீனாவின் செயற்பாடு, அழுத்தம் மிகுந்தது என துருக்கிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Hami Aksoy தெரிவித்துள்ளார்.
21ஆம் நூற்றாண்டில் இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுகின்றமை, மனிதாபிமானத்திற்கு எதிரானது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, சீனாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐ.நாவின் செயலாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளதாகவும் ஹமி அக்சோய் மேலும் தெரிவித்துள்ளார்.





