வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீதான அழுத்தங்களை அமெரிக்கா மேலும் அதிகரித்துள்ளது.உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் மற்றும் அரச எண்ணெய் நிறுவனத் தலைவர் ஆகியோர் மீது புதிய தடைகளை விதிப்பதன் மூலம் மதுரோவிற்கு எதிரான அழுத்தங்களை அமெரிக்கா அதிகரித்துள்ளது.
எண்ணெய் நிறுவன தலைவர், மூன்று சிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகள் மற்றும் மதுரோவின் சார்பில் இரவுநேர தாக்குதல்களில் ஈடுபட்டு சட்டவிரோத கொலைகளுக்கு பொறுப்பான பொலிஸ் பிரிவு தலைவர் ஆகியோருக்கு எதிராகவே தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெனிசுவேலா எல்லைகள் ஊடாக இன்று (சனிக்கிழமை) மனிதாபிமான உதவிகளை வழங்கி வைப்பதற்கு பென்டகன் மற்றும் அமெரிக்க உதவி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
மதுரோவை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அமெரிக்காவின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2018 தேர்தல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்துவரும் அமெரிக்கா, தன்னை இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கெய்டோவை ஆதரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





