LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 2, 2019

விடை பெற்றது நான்கு தலைமுறை கண்ட “தமிழ் நேசன்” தமிழ் நாளிதழ்!

இதழியல்துறையில் மிக நீண்டகாலமாக வெளிவந்துகொண்ருந்த தமிழ் நாளிதழ் தமிழ் நேசன்’ நேற்றுடன் தனது பயணத்தை நிறுத்திக் கொண்டுள்ளது.

மலேசியாவில் உள்ள இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களை இலக்காகக் கொண்டு, மலேசியாவில் வசித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களால்1924ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் திகதி ‘தமிழ் நேசன்’ நாளிதழ் . தொடங்கப்பட்டது.

மலேசிய தமிழர்களின் அரசியல் மற்றும் சமூகக் கண்ணாடியாகவும், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியக் களமாகவும், மலேசியாவில் தமிழ் வளர்த்த, வளர்ந்த காரணிகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வந்தது. இதன் காரணமாக, மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் வாசகர்களால் அதிகமாக விரும்பிப் படிக்கப்பட்ட நாளிதழ்களில் ஒன்றாக ‘தமிழ் நேசன்’விளங்கியது.

இந்நிலையில், கடந்த 95 ஆண்டு காலமாக தமிழ், தமிழர்கள், தமிழர் நலன் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு, 4 தலைமுறை வாசகர்களின் விருப்ப நாளிதழாக வெளிவந்து கொண்டிருந்த ‘தமிழ் நேசன்’, கடந்த 10 ஆண்டுகளாக மின்னணு ஊடகங்கள் மற்றும் போட்டி நாளிதழ்களால் மிகப் பெரிய வர்த்தக நெருக்கடியைச் சந்தித்து வந்தது.

இதனிடையே, உலகமெங்கும் அச்சில் வெளிவரும் பத்திரிகைகள் கடும் வர்த்தகப் பிரச்னை காரணமாக மூடப்பட்டு வரும் நிலையில், அந்த வரிசையில் ‘தமிழ் நேசன்’ நாளிதழும் இணைந்துவிட்டது. அதன்படி, 95 ஆண்டு காலம் வெளிவந்த ‘தமிழ் நேசன்’ தமிழ் நாளிதழ், நேற்றுடன் (31ம் திகதி) தன் பயணத்தை நிறுத்திக் கொண்டது.

இதையடுத்து, நேற்றைய (31ம் திகதி) பதிப்பு ‘தமிழ் நேசன்’ நாளிதழின் முதல் பக்கத்தில், ‘95ஆண்டு கால தமிழ்ச் சேவைக்கு பிறகு விடைபெறுகிறது தமிழ் நேசன்…’ என்ற செய்தியுடன் வெளியானது. இதனால், ‘தமிழ்நேசன் நாளிதழ் மூடப்படுகிறதா..? நிஜமாகவா..?’ என நம்ப முடியாத கேள்விகளுடன், போட்டி போட்டு மலேசிய தமிழர்கள் தமிழ் நேசனை வாங்கியதில், ஒட்டுமொத்த நாளிதழும் சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தது.

‘தமிழ் நேசன்’ நாளிதழ் நிறுத்தப்பட்டமை மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், ‘தமிழ்நேசன்’ நாளிதழ் தொடர்ந்து வெளிவர வேண்டும் என ஒட்டு மொத்த மலேசிய, சிங்கப்பூர் வாழ் தமிழர்களும் கண்ணீர் விடாத குறையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று வெளியான ‘தமிழ் நேசன்’ தலையங்கத்தில், “சமூக வலைதளங்களின் வரவு, மக்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைவு, விளம்பர நிறுவனங்களின் வரவேற்பு கட்டம் கட்டமாக குறைந்தமை போன்ற பல்வேறு காரணங்களால் அனைத்து மொழி பத்திரிகைகளும் பெரும் சரிவைச் சந்திக்கவேண்டிய நிலைக்கு உள்ளாகி வருகின்றன. இப்படிப்பட்ட நிலையிலும் தமிழ் நேசன் நிறுவனம் தொடர்ந்து பத்திரிகையை நடத்திவந்தது.

எனினும், நாளுக்கு நாள் செலவு அதிகரித்ததைத் தொடர்ந்து இன்றோடு (31ம் திகதி) பத்திரிகையை நிறுத்திக்கொள்வது என நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த 95 ஆண்டுகளாக எங்களுக்கு எல்லா வகையிலும் துணையாக இருந்த வாசகர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நம்பிக்கையோடு விடைபெறுகிறோம்; மீண்டும் வருவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தமிழ் நேசன்’ நிறுத்தப்பட்டதையடுத்து மலேசியாவில் தற்போது ‘மலேசிய நண்பன்’, ‘மக்கள் ஓசை’, ‘தமிழ் மலர்’ எனும் மூன்று நாளிதழ்கள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7