
ஜனவரி 28ஆம் திகதி குறித்த நகரசபையின் கவுன்சிலரான பரம் நந்தா என்ற இலங்கைத் தமிழர் கொண்டு வந்த தீர்மானத்தை 52 கவுன்சிலர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சித்திரை முதலாம் நாளான ஏப்ரல் 14 திகதியை தமிழ், சிங்களப் புத்தாண்டாக கொண்டாட சட்டபூர்வமான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து கவுன்சிலர் பரம் நந்தா கூறுகையில்; சற்ரன் நகரசபையின் அனைத்துக் கவுன்சிலர்களும் இத்தீர்மானத்தினை ஏகமனதாக ஏற்றுக்கொண்டமை மகிழ்ச்சி அளிக்கின்றது.
இந்த நாட்டில் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த பல்லின மக்கள் வாழ்கின்றனர். நாம் எமது தாய்நாட்டின் நம்பிக்கைகளையும் கலாசாரத்தையும் கொண்டாடுவதற்கான ஒரு நல்லவாய்ப்பு எமக்குக் கிடைத்திருக்கின்றது.
எங்கள் வேறுபாடுகள் அனைத்தினையும் களைந்து எமக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகள் மூலமாக சற்ரன் வாழ் மக்கள், லண்டன் வாழ் மக்கள் மற்றும் அனைத்துப் பிரித்தானிய மக்களோடும் புரிந்துணர்வோடு ஒன்றிணைந்து வாழவேண்டும் என்று கூறினார்.
சற்ரன் நகர சபையின் தலைவரான கவுன்சிலர் ரூத் டொம்பி கூறுகையில்; ஒவ்வொருவரும் தத்தமது கலாசாரங்கள் மற்றும் மரபுகளை கொண்டாடவேண்டும்.
ஏனைய மதங்கள் மற்றும் ஏனைய சமூகங்களின் மரபுகளை நாம் எல்லோரும் புரிந்துகொள்வதன் மூலம் எங்கள் வாழ்க்கையை வளப்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.
பெருமளவிலான ஈழத்தமிழர்கள் வாழும் கனடாவில் ஜனவரி மாதமானது தமிழர்களின் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தத்தக்கது.
