மார்ச் 29 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில் பிரெக்ஸிற் தீர்வை எட்டுவதற்கு மிகக்குறைந்த காலமே எஞ்சியிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடையே கடந்த வருடம் எட்டப்பட்ட ஒப்பந்தமே ஒழுங்கான முறையில் பிரெக்ஸிற் நிகழ்வதற்கான சிறந்த வழி எனவும் லக்ஸம்பேர்க் செய்தியாளர் மாநாட்டில் பார்னியர் தெரிவித்தார்.
லக்ஸம்பேர்க் பிரதமர் சேவியர் பெட்டல் மற்றும் மைக்கேல் பார்னியர் இடையே இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே பார்னியர் இவ்வாறு கூறினார்.
பிரெக்ஸிற்றை விரும்பியது பிரித்தானியா தான் எனவும் அதனால் பிரெக்ஸிற் தீர்வை எட்டவேண்டிய பொறுப்பும் பிரித்தானியாவுக்கே உள்ளதாகவும் இச்செய்தியாளர் மாநாட்டில் பேசிய லக்ஸம்பேர்க் பிரதமர் சேவியர் பெட்டல் தெரிவித்தார்.
பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக பிரித்தானிய பிரெக்ஸிற் செயலாளர் ஸ்டீபன் பார்க்லே இன்று மைக்கல் பார்னியரை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





