(பாண்டி)
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு முள்ளிவட்டவான் பகுதி மக்களினால் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன் கிழமை (13) பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கிரான் புலிபாய்ந்த கல் வீதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது ஊர்வலமாக கிரான் பிரதேச செயலகத்தினை சென்றடைந்தது.
ஊர்வலத்தில் கலந்த கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பியும் கையில் பதாதைகளை ஏந்தியவாறும் கிரான் பிரதேச செயலகத்தினை சென்றடைந்தனர்.
அகழாதே.அகழாதே ,ஆற்று மணலை அகழாதே,சுரண்டாதே,சுரண்டாதே,கணிய மணலை சுரண்டாதே,மணலை அள்ளி மக்களை புதை குழியில் தள்ளாதே,என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
முள்ளிவட்டவான் ஆற்றில் சட்டவிரோமான முறையில் மண் அகழ்வதால் விவசாய நிலங்கள் பாதிப்படைவதுடன், வீதிகள் குன்றும் குழியுமாக சேதமடைந்து காணப்படுவதாகவும் வீதி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தூசு படிவதனால் குடிநீர் மாசுபடுவதாகவும் தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவட்டவான் ஆற்றில் மண் அகழ்வதால் வயல் நிலங்கள் சேனைப்பயிர் செய்கை கால் நடைகளின் மேச்சல் தரை போக்கு வரத்து மற்றும் விவசாயச் செய்கை போன்றன பாதிப்படைவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னர் ஆற்றின் உயரம் ஒன்றரை அழத்தில் காணப்பட்டது.இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக மண் ஆகழ்வு நடவடிக்கை இடம் பெறுவதனால் ஆ;றின் ஆழம் தற்போது ஏழு அடியாக காணப்பட்டு வருகின்றது. இது மேலும் அதிகரிக்கலாம்.
முள்ளிவட்டவான் கிராமத்தில் 45 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களின் ஜீவனோபாய தொழிலாக மீன்பிடி மற்றும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இவ்விடத்தில் மண் அகழ்வதை நிறுத்துமாறு தெரிவிக்கும் போது மண் அகழ்பவர்கள் அடிக்க வருவதாகவும், தகாதவார்த்தைகளைக் கூறி ஆச்சுறுத்துகின்றனர் என கூறுகின்றனர்.
எனவே மணல்களை உழவு இயந்திரங்களில் ஏற்றிக்கொண்டடு வீதிகளால் வேகமாக வருவதால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதுடன், பாடசாலை செல்லும் மாணவர்களின் சீருடைகள் தூசுகளால் சேதமடைந்து காணப்படுவதாக கூறுகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவிடம் கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்ட பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்துசென்றனர்.












