ஜெருசலேம் புறநகர் பகுதியில் ஒரு காட்டில் வைத்து இஸ்ரேலிய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் பாலஸ்தீனிய இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதென்யாஹூ இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.குறித்த சந்தேகநபரை கைது செய்ததை அடுத்து இஸ்ரேலியர்களை வன்முறையுடன் தாக்கும் அல்லது கொலை செய்யும் அனைத்து பாலஸ்தீனியர்களையும் இராணுவம் கண்டறியும் என்று அவர் குறிப்பிட்டார்.
19 வயதான ஒரி அனஸ்பாச்சர் என்ற பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டில் 29 வயதான பாலஸ்தீன இளைஞர் பாலஸ்தீன ரமல்லா நகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக இஸ்ரேலிய ஷின் பெட் உள்நாட்டு பாதுகாப்பு சேவை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரியவர் ஹேர்பன் நகரில் இருந்து கூரிய ஆயுதங்களுடன் வௌியேறியதுடன், காட்டுப் பகுதியில் வைத்து இஸ்ரேலிய பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்தாக பொலிஸார் குறிப்பிட்டார்.
எனினும், இந்த கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று சந்தேகநபரின் வீட்டிற்கு சென்ற இஸ்ரேலிய படையினர் அங்கு கடும் தேடுதல் வேட்டையை முன்னெடுத்தனர்.





