LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 2, 2019

வெற்று அறிவிப்புகளின் குவியலாக இடைக்கால வரவு செலவுத்திட்டம் – வைகோ

வெற்று அறிவிப்புகளின் குவியலாக இடைக்கால வரவு செலவுத்திட்டம் அமைந்துள்ளது என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய நிதித்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கை 2019, நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டு இருக்கின்றது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் நிறைவேற்ற முன்வராத திட்டங்களைத் தற்போது வாக்குறுதிகளாக நிதி அமைச்சர் அள்ளி வீசி இருக்கிறார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 விழுக்காடு என்று மத்திய அரசு கூறி இருக்கிறது. ஆனால், மத்திய புள்ளியியல் நிறுவனம் 2017-18 இல் ஜிடிபி 6.8 விழுக்காடு தான் என்று தெரிவித்துள்ளது. 2018-19 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 விழுக்காடு அளவு என்று வளர்ச்சி அடையும் என்பதும் மிகை மதிப்பீடுதான்.

பணவீக்க விகிதம் 10.1 என்ற இரட்டை இலக்கத்திலிருந்து, 2.1 ஆக இறங்கி குறைந்து விட்டது என்று நிதி அமைச்சர் கூறுகிறார். ஆனால், அதற்கு ஏற்ப விலைவாசி ஏற்றம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதா என்றால், இல்லை என்பதே உண்மை நிலையாகும்.

விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன? பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைக்கவும் எந்த முயற்சியும் இல்லை.

நாட்டின் உயிர்நாடியான வேளாண்மைத் தொழில் தொடர் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. கடன் சுமையால் விவசாயிகளின் தற்கொலைகள் நீடித்து வரும் நிலையில், வேளாண் கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்போ, விவசாய விளைப் பொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய நிலையான விலை நிர்ணயக் கொள்கை பற்றிய விவரமோ மத்திய நிதிநிலை அறிக்கையில் இல்லை.

இரண்டு ஹெக்டேர் நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு மாதம் ரூ. 500 வங்கிக் கணக்கில் (அதாவது ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய்) வரவு வைக்கப்படும் என்று மோடி அரசு தெரிவித்திருப்பது வெறும் ஏமாற்று அறிவிப்பு ஆகும். விவசாயிகளை இழிவுபடுத்தும் மோசடி ஆகும்.

மோடி அரசு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று 2014 வரவு-செலவுத் திட்டத்தில் கூறியதை இப்போதும் கூறி இருக்கிறது. ஆனால், இதுவரையில் அதற்காக சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

தமிழ்நாட்டில் 50 ஆண்டுகாலத்தில் இல்லாத அளவுக்கு ‘கஜா’ புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பேரழிவுக்கு உள்ளாயின. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மீட்புக்கு மோடி அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யாமல் தமிழகத்தை வஞ்சித்து இருப்பது கண்டனத்துக்கு உரியது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பணமதிப்பு இழப்பு உள்ளிட்ட காரணங்களால் தொழிற்துறை மிகப் பெரிய சரிவைச் சந்தித்து இருக்கிறது உற்பத்தித் தொழிற்துறை பெரும் பாதிப்புக்கு உள்ளானது.

நாட்டில் அந்நிய நேரடி முதலீட்டுக்குக் கதவு திறந்து விடப்பட்டதால் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் மீட்சிக்கு வகை செய்யப்படவில்லை.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 6.1 விழுக்காடு உயர்ந்து விட்டது என்று தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் கூறுகிறது.

இதன்மூலம் நரேந்திர மோடி 2014 இல் பிரதமர் பொறுப்பு ஏற்றவுடன் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புக்களை உருவாக்குவோம் என்று கொடுத்த வாக்குறுதி மோசடியானது என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.

உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி இறைத்த சலுகைகளால் நாடு கண்ட பலன் என்ன? வேலைவாய்ப்பு அதிகரித்து உள்ளதா? தொழில்துறையும், அடிப்படைக் கட்டமைப்புத் துறையும் வளர்ச்சி பெற்றுள்ளதா? என்றால் அப்படி எதுவும் இல்லை.

அயல்நாட்டு இறக்குமதியைக் குறைக்க ஹைட்ரோகார்பன் உற்பத்தியை உள்நாட்டில் அதிகரிப்போம் என்று மீண்டும் அறிவித்ததன் மூலம், காவிரி டெல்டாவைப் பாலைவனம் ஆக்கும் திட்டத்தை மூர்க்கத்தனமாகச் செயற்படுத்துவோம் என்பதில் மோடி அரசு உறுதியாக இருப்பதை வரவு-செலவுத் திட்டம் காட்டுகிறது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7