துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் எவரைப்பார்த்தாலும் சுட்டுத் தள்ளுவோம் என்று இந்திய இராணுவ உயரதிகாரிகள் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எல்லைத் தாண்டிய தீவிரவாதம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ். ஆதரவு இல்லாமல் சாத்தியமில்லை என்றும் இராணுவ உயரதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஸ்ரீநகரில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே இராணுவ ஜெனரல் கே.ஜே.எஸ்.தில்லான் இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் 3 முக்கிய நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 100 மணி நேரத்திற்குள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைமை காஷ்மீரில் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் வாழும் பிரிவினை சக்திகள் துப்பாக்கியைத் தூக்கிப்போட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கத்தை கைவிட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.





