இன்று (புதன்கிழமை) சபையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபாவை சிறப்பாக வழிநடத்தியமைக்காக சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பல கூட்டத்தொடர்கள் ஆக்கப்பூர்வமாக இருந்தன. அத்துடன் 16 வது லோக்சபாவில் தன்னுடன் பணியாற்றிய அனைத்து எம்.பி.,க்களுக்கும் அவர் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
டிஜிட்டல் பாதையில் இந்தியா பயணிப்பது மகிழ்ச்சியளிப்பதுடன், கடந்த 4 வருடங்களில் அதிகளவிலான விண்கலன் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பங்களாதே – இந்தியா இடையிலான நில பிரச்சினையை தீர்ந்துள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி வௌியிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், “பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனது வரவேற்பையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பெண்கள் என்பது பெருமை. உலக பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு மகளிர் அதிகம் பேர் இடம் பெற்றுள்ள அமைச்சரவை இதுவாகும். இங்கிருந்து 85 சதவிகித மனநிறைவோடு விடைபெறுகிறோம். இந்திய தேசமே தற்போது எங்களது அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இடர்ப்பாடுகளின்போது அண்டை நாடுகளுக்கு அனைத்து உதவிகளும் வழங்கியிருக்கிறோம்.
வெளிநாட்டுத் தலைவர்களும் தற்போது இந்திய அரசியல் தலைவர்களை மதிக்கத் தொடங்கியுள்ளனர். எனது ஆட்சியில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத 1400 சட்டங்கள் ஒழிக்கப்பட்டன.
மக்கள் தொகையில் 2-வது பெரிய நாடான இந்தியாவில் ஆதார் அட்டை திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைபடுத்தி சர்வதேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது எங்கள் நான்கரை ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளில் ஒன்று” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.






