
அக்மீமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து குறித்த இரண்டு வர்த்தகர்களும் கொலை செய்யப்பட்டு, பின்னர் வலஸ்முல்ல, மெதகங்கொட பிரதேச வனப்பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ரசேன் சிந்தக மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர் கொலை செய்யப்பட்டு பின்னர் சடலம் எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுவரும் விசாரணைகளிலிருந்த இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – சந்தேகநபரிடம் விசாரணைக்கு உத்தரவு (2ஆம் இணைப்பு)
காலி – ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட தெற்கு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் விராஜ் மதுசங்கவை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை) காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக தென் மாகாண விசேட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 15 அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள் காணாமல்போன சம்பவம் – உப பொலிஸ் பரிசோதகர் கைது
காலி – ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று (வெள்ளிக்கிழமை) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ரசேன் சிந்தக மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர், கடந்த மாதம் 23ஆம் திகதி வான் ஒன்றில் வந்த குழுவினரால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
