
மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பில் மோர்னியோ தெரிவித்துள்ளார். லிபரல் அரசாங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நிலையில், இதுவரை மூன்று வரவு செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கனேடிய மத்திய பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த அரசாங்கத்தின் நான்காவது வரவு செலவுத் திட்டமாகவும், தேர்தலுக்கு முந்தைய பாதீடாகவும் இது அமையவுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்நாட்டிலேயே பொருட்களை கட்டுப்படியான விலையில் மக்கள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் மருத்துவ உதவித் திட்டங்கள் தொடர்பிலும் சாதகமான அம்சங்கள் காணப்படும் என்ற சமிக்ஞையையும் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை தற்போது வேலைகளின் தன்மைகள் அதி வேகமாக மாறிவரும் சூழ்நிலையில், பணியாளர்கள் தம்மை அதற்கோற்றவாறு தயார் படுத்திக் கொள்வதற்கான பயிற்சி நிதியினை இந்த அறிக்கை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
