பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதும், தண்டிப்பதும் முக்கியமானது என சவுதி இளவரசர் மொஹமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.அத்துடன், பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவுடன் துணையாக இருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பில் சல்மான் இருநாள் அரசமுறைப் பயணமாக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தில் இன்று (புதன்கிழமை) பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். அதன்பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.
இதன்போது உரையாற்றிய சவுதி இளவரசர், “தீவிரவாதமும் பயங்கரவாதமும் நமது பொதுவான பிரச்சினைகளாக இருக்கின்றன.
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க உளவுத் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் எங்களது நட்பு நாடான இந்தியாவுக்கு சவுதி அரேபியா உறுதுணையாக இருக்கும்.
அத்துடன் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதும், தண்டிப்பதும் முக்கியமானது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை சவுதி ஆதரிக்கிறது.
இந்தியாவில் பயங்கரவாதத்தை வேரறுக்க நாம் துணையாக இருப்போம். வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இந்தியாவுடன் ஒன்றிணைந்து நாங்கள் செயலாற்றுவோம்’ என்று உறுதியளித்தார்.
                 

 



