எத்தனை கூட்டணி வந்தாலும் தி.மு.க.வை எவராலும் அசைக்கமுடியாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.அத்துடன் ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே அ.தி.மு.க.வினர் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறார்.
இந்நிலையில் பூந்தமல்லியில் இன்று (புதன்கிழமை) ஸ்டாலின் கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அங்கு உரையாற்றிய அவர், “அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. போன்ற கட்சிகள் இருந்தாலும் தி.மு.க. நிச்சயமாக வெற்றி பெறும்.
அவர்கள் கூட்டணி நாடகம் ஆடுகிறார்கள். ஆனால் எத்தனை கூட்டணி வந்தாலும் தி.மு.க.வை அசைக்க முடியாது.
அ.தி.மு.க.வினர் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைந்ததற்கு முக்கியமாக ஊழல் வழக்குகளே காரணம்” என்று தெரிவித்தார்.
                 

 



