“அகில இலங்கை சாதனைப் பயணம்” என்னும் கருப்பொருளில் இலங்கையைச் சுற்றி துவிச்சக்கர வண்டியில் பயணம் மேற்கொண்டுள்ள தர்மலிங்கம் பிரதாபன் புத்தளத்தை சென்றடைந்தார். இதையடுத்து இன்று (சனிக்கிழமை) கொழும்புக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார்.வவுனியாவைச் சேர்ந்த இளம் கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை புத்தளத்தை சென்றடைந்தார்.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரித்துக்கொடுக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 10 ஆம் திகதி வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் முன்பாக இந்த சாதனைப் பயணத்தினை இவர் ஆரம்பித்தார்.
அந்தவகையில், அநுராதபுரம், மாத்தளை, கண்டி, கேகாலை மற்றும் குருநாகல் ஊடாக புத்தளம் நகரை சென்றடைந்தார். இன்று காலை புத்தளம் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து கொழும்பை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார். இதன்போது புத்தளம் சர்வமத குழு உறுப்பினர் சுந்தரராம குருக்கள் பொன்னாடை போர்த்தி, ஆசி வழங்கி வழியனுப்பி வைத்தார்.
இதன்போது, வவுனியா நகர சபையின் உப தலைவர் குமார சுவாமி , முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் செந்தில் மயூரன், முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி உட்பட உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரதாபன் கூறுகையில், “இந்த நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் தோட்டத் தொழிலாளர்களும் மனிதர்களே. மழையிலும், குளிரிலும் நனைந்து நிம்மதியிழந்து சொல்ல முடியாத பல துன்பங்களோடு லயன்களில் வாழ்ந்து வருகிறார்கள்.
இவ்வாறு சிறிய லயன்களில் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் வயதுக்கு வந்த பிள்ளைகளும், சிறுவர்களும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறது.
அத்துடன், இன்று நாட்டில் வாழ்க்கை செலவும் அதிகரித்துள்ளதால் அவர்களுடைய சம்பளத்தை அதிகரித்துக்கொடுக்க வேண்டிய கட்டாயத் தேவையும் உள்ளது. அவர்கள் இந்நாட்டின் முக்கிய சொத்தாகும். அவர்கள் சிந்தும் வியர்வைதான் நாங்கள் நாள்தோரும் அருந்தும் தேனீராகும்.
எனவே, தேநீர் அருந்தும் ஒவ்வொருவரும் தோட்டத் தொழிலாளர்களின் துயரத்தைத் துடைக்க முன்வர வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்” என்று ௯றினார்.
இந்தப் பயணமானது 2,125 கிலோ மீற்றர் தூரம் கொண்டதுடன், 32 நாட்களில் 25 மாவட்டங்களுக்கும் பயணத்தை மேற்கொண்டு அடுத்த மாதம் 13 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நிறைவடையவுள்ளது.





