
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்களுக்காக அமைதிக்கான ‘மகாத்மா காந்தி’ விருது தென்கொரிய அரசு சார்பில் வழங்கப்படுகின்றது.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (வியாழக்கிழமை) தென்கொரியா சென்றடைந்த பிரதமர் சியோலில் உள்ள புகழ்பெற்ற யொன்சி (Yonsei) பல்கலைக்கழக்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அங்கு நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மோடி மற்றும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் மற்றும் ஐ.நா சபை முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி மூன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து பேசிய பிரதமர் மோடி, மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் வேளையில், அவரது சிலையை திறந்து வைத்தது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று குறிப்பிட்டார். தீவிரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டும் மனிதகுலம் எதிர்கொண்டுள்ள இரண்டு பெரிய சவால்கள் என்றும் கூறினார்.
அத்துடன் புதிய ஒப்பந்தங்களிலும் இரு நாட்டு தலைவர்கள் கைசாத்திட்டனர்.