கணவனால் கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட பங்களாதேஷ் பெண் ஒருவருக்கு கனடா வைத்தியர்கள் மறுவாழ்வு வழங்கியுள்ளனர்.பங்களாதேஷைச் சேர்ந்த Popi Rani Das (வயது 30) என்ற பெண்ணுக்கே இவ்வாறு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் கணவர் தனது மனைவியைக் கொலைசெய்துவிட்டு, அதிக வரதட்சணையுடன் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஆசையில் மனைவியை ஏமாற்றி அமிலத்தைக் குடிக்க கொடுத்துள்ளார்.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் பங்களாதேஷ் வைத்தியசாலையில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், நண்பர் ஒருவரின் மூலம் அவர் கனடாவிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு கனடா வைத்தியர்கள் பங்களாதேஷ் பெண்ணுக்கு மறுவாழ்வளித்துள்ளனர்.
அவரும் அவரது தாயாரும் கனடாவில் முறைப்படி புலம்பெயர்ந்தோர் என்னும் நிலைமையை பெறுவதற்காக முயற்சி செய்து வருகின்றனர்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணின் கணவர், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





